விடிய விடிய மின்சாரம் இல்லாமல் தூங்கா நகரமாக மாறிய சென்னை : நடந்தது என்ன?

சென்னை மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக சென்னை நகரமே நேற்று இரவில் இருளில் மூழ்கியது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். சென்னை மணலியில் செயல்படும் துணை மின் நிலையத்தில் இயங்கி வரும் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டின் ஒரு பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உடனடியாக சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக விபத்து நடந்த பகுதி அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

திடீரென இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் என்ன நடந்தது என தெரியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த தீ விபத்தால் மத்திய சென்னை வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. முதலில் வழக்கமாக மின் விநியோகம் தடைபடுவது தானே என பொதுமக்கள் நினைத்தனர். ஆனார் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் அவர்கள் சற்று குழம்பி போயினர். ஆனால் செல்போன் மூலமாக சமூக வலைதளம் பயன்படுத்துவோர் ஊடகங்களில் வெளியான செய்தியை வைத்து மணலி தீ விபத்து குறித்து அறிந்து கொண்டனர்.

பொதுவாகவே மின்தடை ஏற்படும் போது தமிழ்நாடு வாரியத்தின் சேவை மைய எண்களை பலரும் தொடர்பு கொண்டு என்ன காரணம், எப்போது மின் விநியோகம் சீராகும் என விசாரிப்பார்கள். அப்படியாக ஒரே நேரத்தில் நேற்று இரவு பலர் முயற்சி செய்ததால் சேவை மைய என்ணையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது. மின்வாரிய சேவை எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் சிலர் நேரடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையில் முக்கிய இடங்களான திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், நந்தனம், அடையாறு, தேனாம்பேட்டை, மந்தவெளி, ராயபுரம், சூளைமேடு, மாதவரம், கோடம்பாக்கம்,நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கியது.

மேலும் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி மின்வாரிய அலுவலகம் முன் திரண்டு அதிகாரிகளிடம் விசாரித்தனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர், “விரைவில் மின்சாரம் வரும். நீங்கள் அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள். கூட்டம் கூடினால் கைது செய்வோம்” என எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. சாலைகளிலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய அளவில் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மின்சார துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை முழுவதும் அடுத்த 15 முதல் 30 நிமிடத்தில் மின் விநியோகம் படிப்படியாக சீராகும் என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார். முதற்கட்டமாக மயிலாப்பூர் , ராஜ அண்ணாமலை புரம், புளியந்தோப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும், மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் மின் விநியோகம் படிப்படியாக சீரடைந்தது.

Leave a Response