அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இதில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன, மேலும் இரு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சிறப்பு தீர்மானங்களில் வருகின்ற காலகட்டத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் எடுக்கும் முடிவே இறுதியானது என்ற ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு: எம்.ஜி.ஆர். அவர்களால் மக்கள் இயக்கமாகத் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, இன்று ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் அவர்களால் காப்பாற்றப்பட்டு, பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றுள்ள அரசியல் பேரியக்கமாம் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ தமிழ் நாட்டின் தனிப் பெரும் பேரியக்கமாகத் திகழ்ந்து, 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்திய அரசியல் வானில் துருவ நட்சத்திரமாய், நாட்டு மக்களுக்கு வெளிச்சத்தைத் தந்துகொண்டு வருகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஆலமரம்; ஆயிரங்காலத்துப் பயிர்; எதிரிகளால் ஊடுருவ முடியாத அளவிற்கு கழகம் ஒரு எஃகுக் கோட்டை; எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்ற புரட்சித் தலைவி அம்மாவின் சூளுரையை மெய்ப்பிக்கும் வகையில், மக்கள் சேவையில் தன்னை கரைத்துக்கொண்டு தாளாது பணியாற்றி, லட்சிய நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த நிலையிலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி வெற்றி நடை போட்டு வருகிறது.

கிளைக் கழகச் செயலாளராக கழகப் பணியைத் தொடங்கி, தனது கடுமையான உழைப்பால், கொண்ட கொள்கையால், லட்சிய வேட்கையோடும், விடாமுயற்சியோடும், கொள்கைப் பற்றோடும், இயக்கத்தின்பால் மாறாத விசுவாசத்தோடும் தொடர்ந்து பயணித்து வருகிறார் எடப்பாடியார் அவர்கள்.

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு அரணாகத் திகழ்ந்து ‘கழகப் பொதுச் செயலாளர்’ என்கிற உயர்வினைப் பெற்று இந்த இயக்கத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து, எத்தகைய சோதனைகள், வேதனைகள் வந்தாலும், தலைதாளாத சிங்கமென கர்ஜித்து வருகிறார்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக கழக அரசைக் காப்பாற்றி, பல்வேறு நல்ல திட்டங்களைத் தந்து, அவற்றின் வாயிலாக அளவிட முடியாத சாதனைகளைப் படைத்து, கழகத்திற்கு பெருமையை தேடித் தந்தவர் எடப்பாடியார் அவர்கள்.

தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும், அதனையடுத்து வரும் 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையும், அரசியல் வியூகங்களையும், சிறந்ததொரு கூட்டணியையும் அமைத்து, தேர்தல் வியூகங்களை வகுத்து, தமிழக வாக்காளப் பெருமக்களின் நன்மதிப்பைப் பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியையும், அதனையடுத்து 2026-ல் கழக ஆட்சியையும் அமைப்பதற்கு, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு உறுதுணையாகத் திகழ்ந்து, அவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு அரணாக விளங்கி, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் விழிப்புடன் தேர்தல் பணிகளை ஆற்றுவது என இச்செயற்குழு உறுதி ஏற்கிறது.

மேற்கண்ட பல்வேறு தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளவாறு, செயலற்ற அரசாக எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் அல்லல்படும் நிலைக்குத் தள்ளிய மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு முடிவுகட்டி, மக்கள் வெறுக்கும் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆட்சிகளின் நீட்சியாக, மீண்டும் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை கொன்றுவர கூலூரை ஏற்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response