அடுத்த தமிழக பாஜக தலைவராக குஷ்பூ வருகிறாரா..?

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து போராட்டம் மற்றும் அறிக்கை வெளியிடுவதில் அதிமுகவிற்கு கடும் டப் கொடுக்கிறது பாஜக. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பல கிராமங்களுக்கும் பாஜக சென்றுள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் கட்சியை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றுள்ளனர்.

எல்.முருகனுக்கு அடுத்து தலைவர் பதவிக்கு வந்த அண்ணாமலை தனது அதிரடி அரசியலால் தமிழக மக்களை மட்டுமில்லாமல் நாட்டையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் நடை பயணம், போராட்டங்கள், அதிரடி பேச்சு என தமிழக அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்தார். அதற்கு பலன் கிடைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் தனி அணியை உருவாக்கிய அண்ணாமலை அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பல இடங்களில் பிடித்தார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையானது தொடர்ந்தது.

இந்தநிலையில் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை இந்த மாதம் இறுதியில் லண்டன் செல்ல இருப்பதாகவும், அங்கு அரசியல் தொடர்பான படிப்பு படிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மாநில தலைவர் பதவி ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை மோடி மற்றும் அமித்ஷா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளராக இருக்கும் வானதி சீனிவாசன், தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ராகவன் பெயர்கள் அடிபட்டது.

ஆனால் பாஜக தேசிய தலைமை இந்த 3 பேரை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக ஒருவரை தலைவர் பதவிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில் நடிகை குஷ்புவின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் திடீரென தனது தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தார். அரசு பதவியில் இருந்து கொண்டு தன்னால் அரசியலில் ஈடுபடமுடியவில்லையென தெரிவித்தார். இனி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் தான் தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து நடிகை குஷ்பு தனது அரசு பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக தேசிய தலைமையில் உத்தரவில் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் பாஜக மாநில தலைவராக யாரை தேசிய தலைமை நியமிக்கப்போகிறது என்ற தகவல் உறுதியாகிவிடும் என பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.

Leave a Response