சீர்காழி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அடுத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆச்சாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் 50 வயதான உதயகுமார். இவர் வீடுகள் கட்டி தரும் கன்ஸ்ட்ரக்சன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுள்ளார். அவரது மனைவி 45 வயதான ரோஸ்லின் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் சுமார் பகல் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்து ரோஸ்லின் வாயில் துணியை வைத்து, கால் இரண்டையும் கட்டி போட்டு விட்டுள்ளனர்.
கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள்
தொடர்ந்து அவர்கள் கத்தியை காட்டி ரோஸ்லினை மிரட்டி, வீட்டிற்குள் பீரோலில் வைக்கப்பட்டிருந்த 51 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரோஸ்லின் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து தடையவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குற்றவாளிகளை தனிப்பட்ட அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கட்டி போட்டுவிட்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மயிலாடுதுறை – கடலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்று பாலம் சோதனை சாவடியில் போலீசார் வைத்துள்ள சிசிடிவி பழுதால் கொள்ளையர்கள் வந்து சென்றதை பார்க்க முடியாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.