வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, தமிழ் சினிமாவில் பான் இந்தியா படங்கள் வெளியாகவில்லையே, என்ற குறையை போக்கும் படமாக இப்படம் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள கமல்ஹாசன், முன்னதாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ் தான் சொல்ல வேண்டும். அதற்கும் இவர்தான் இயக்குனர் என நான் முடிவு செய்துவிட்டேன்.” என தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடுவது திட்டமிட்டது இல்லை. தானாகவே அமைந்த அழகான சம்பவம் அது. கமல்ஹாசன் நடித்த முதல் ‘விக்ரம்’ திரைப்படம் 1986ம் ஆண்டு மே 29 அன்று வெளியானது. அதை போலவே இந்த புதிய ‘விக்ரம்’ திரைப்படத்தையும் 2022ம் ஆண்டு மே 29 அன்று தான் வெளியிட திட்டமிடப்பட்டதாம். சில பணிகள் முடிய கால அவகாசம் தேவைப்பட்டதால், இந்த புதிய ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ம் தேதிக்கு வெளியீட்டு தேதி தள்ளி போடப்பட்டது. இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி தான். கலைஞரை பற்றி பேச எனக்கு ஆயிரம் உள்ளது.” என்றார்.
மேலும், பழைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இந்த விக்ரம் இருக்குமா, என்று கேட்டதற்கு அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். படத்தை பார்த்த பிறகு இது தொடர்ச்சியா அல்லது வேறு ஒரு கதையா என்பதை ரசிகர்கள் முடிவு செய்துகொள்வார்கள். அப்போதைக்கு ஒரு ஐடியா வைத்திருந்தேன், அதை இயக்குநர் ராஜசேகரிடம் சொன்ன போது அவர் ரொம்ப புதுஷாக இருக்கு வேணாம் என்றார். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். லோகேஷ் என்னிடம் கதை சொன்ன போது, அந்த ஐடியாவை சொன்னேன். அவர் ஆஹா சார், இது நல்லா இருக்கே என்று இதை கையில் எடுத்துக்கொண்டார்.” என்றார்.