மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் உறுதியாக எம்.பி.யாக முடியும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஓர் இடம் உறுதியாகியுள்ளது.
திமுக சார்பாக கடந்த முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் வில்சனும் இந்த முறையும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பில் உள்ளார். 2021-ல் காலியான பதவியின் அடிப்படையிலேயே எம்.எம். அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 4 ஆண்டுகள் மட்டும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள அப்துல்லா மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக எம்எல்ஏ தேர்தலில் வாய்ப்பு கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மதிமுகவைப் பொறுத்தவரை இந்த முறை எந்த ஒப்பந்தமும் திமுகவுடன் போடவில்லை. அதேசமயம் திமுகவிலும் இந்த ஒற்றை சீட்டுக்கு கடும் போட்டி இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணியில் இருப்பதால் அவருக்குப் பதிலாக அதிமுகவைச் சேர்ந்தவரே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்.
ஆறாவது உறுப்பினராக, அதிமுகவின் சார்பில் 2வது உறுப்பினரைத் தேர்வு செய்ய அதிமுகவுக்கு மேலும் சில வாக்குகள் தேவைப்படும் நிலையில் பாஜக உதவியுடன் அதை வெல்லலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாநிலங்களவைத் தேர்தல் என்பது மிகுந்த சவாலாகவே பார்க்கப்படுகிறது.