குதிரைவால் திரை விமர்சனம்:

அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் “குதிரைவால்”. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.

கனவிலிருந்து விழிக்கிறார் படத்தின் நாயகன் கலையரசன். விழிக்கும் போது அவருக்கு வால் முளைத்திருப்பதை கவனிக்கிறார் கலையரசன். தனக்கு எப்படி திடீரென வால் முளைத்தது என்று குழம்பி அதற்கான காரணத்தை தேடி செல்கிறார் கலையரசன். தனக்கு வாழ் முளைத்தற்கான காரணம் தன்னுடைய கனவில் தோன்றியிருக்குமோ என எண்ணி குறி சொல்லும் பாட்டி, ஜோசியர் என சிலரை தேடித்தேடி சென்று ஆலோசனை செய்கிறார் வால் முளைத்த கலையரசன்.

கலையரசன் சந்திக்கும் குறி சொல்லும் பாட்டி, ஜோசியர் மற்றும் கணக்கு வாத்தியார் என அனைவரும் படத்தின் கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்கின்றனர். இருப்பினும் படத்தின் திரைக்கதை பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்ப்படி இல்லை என்பது படக்குழுவினர் ஒத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலுடன் சிரமப்பட்டு கலையரசன் நடித்திருந்தாலும், முன்பு நடித்த படங்களை விட இப்படத்தில் நடிப்பில் மெருகேற்றி இருக்கிறாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பிலும், கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் கலையரசன் சற்று கவனம் செலுத்தினால் பின் வரும் காலங்களில் கலையரசன் ஸ்டெடியாக நடிப்பு பயணம் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

படத்தின் நாயகி அஞ்சலி பட்டேலுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கு ஒன்றும் பெரிய கதாபாத்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பிலும் சுமார் தான் அஞ்சலி பட்டேல். படத்தில் நடித்திருக்கும் சேத்தன், சிறுமி மானசா, சிறுவன் பரிதிவாலன், லட்சுமி பாட்டி, கணக்கு வாத்தியாராக நடித்திருக்கும் ஆனந்தசாமி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

மலைகளையும், மலை சார்ந்த இடங்களையும் அழகியலோடு படம்பிடித்து பார்வையாளர்களை பயணிக்க உறுதுணையாக இருந்தவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார். கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டும். கதை சற்று குழப்பமாக இருந்தாலும், படத்தின் நீளம் பார்வையாளர்களை முகம் சுளிக்காதப்படி இருக்கும் வங்கியில் படத்தை 2 மணி நேரம் 4 நிமிடங்கள் என அதன் அளவை குறைத்து தன்னுடைய படத்தொகுப்பு பணியை நேர்த்தியாக செய்துள்ளார் படத்தொகுப்பாளர் எம்.கே.பி. கிரிதரண்.

“குதிரைவால்” படத்திற்கு அடுத்தபடி பலம் சேர்த்திருப்பது படத்தின் இசை. பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் இணைத்து அமைத்துள்ள பின்னணி இசை பாராட்டுதலுக்குரியது. காட்சிகளில் எங்கு அமைதி தேவையோ அதற்கேற்றாற்போல் இசையை அமைத்துள்ளனர் இசை அமைப்பாளர்கள்.

உலகம் வெப்பமயமாதல், வாழ்க்கை தத்துவம், மதம் மாற்றம் மூலம் ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிப்பது, உலவியல் ரீதியான பிரச்சனைகள், தனிமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் வாட்டி எடுக்கும், மனிதர்களை அரசாங்கம் எப்படி பார்க்கிறது என்பதை பற்றி தன்னுடைய கதை மூலமாக கதையாசிரியர் ஜி.இராஜேஷ் சொல்லியுள்ளார். ஆனால் அவர் சொன்ன விதமோ பார்வையாளர்கள் எளிதில் புரியும் வகையில் இல்லை என்பது தான் உண்மை, அதுவே படத்துக்கு ஒரு பெரிய மைனஸாக அமைந்துள்ளது.

ஒரு இயக்குநர் என்பவர் தன்னுடைய சொந்த கதையில் படத்தை இயக்கவில்லை என்றாலும், மற்றவர்கள் கதையை கொண்டு படம் இயக்கும் போது, அந்த கதையில் இயக்குனரின் திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும், பார்வையாளர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும்படியும் திரைக்கதையை அமைக்க வேண்டும் அல்லது திரைக்கதை எழுதுபவர்களிடம் நேர்த்தியான பணியை பெறவேண்டும். இப்படத்தின் கதையாசிரியர் ஜி.ராஜேஷ் தான் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அப்படி இருக்க, இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் கதையாசிரியர் ஜி.ராஜேஷுடன் இனைந்து திரைக்கதையை சுவாரசியமாகவும் பார்வையாளர்கள் புரியும்படியும் அமைத்து இயக்கி இருக்க வேண்டும்.

இருப்பினும் “குதிரைவால்” திரைப்படம் ஒரு புதிய வகையான முயற்சி என்று நம் மனதை நாம் தேற்றிக்கொண்டு படத்தை பார்க்கலாம்.

Leave a Response