ரைட்டர் திரை விமர்சனம்…

திருச்சி அருகிலுள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்து வருகிறார் படத்தின் நாயகனான சமுத்திரக்கனி. நீண்ட வருடங்களாக காவல் துறைக்கு ஒரு சங்கம் தேவை என்ற முயற்சி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்தததே. அப்படி ஒரு முயற்சியில் நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறார் சமுத்திரக்கனி. இந்நிலையில் சமுத்திரக்கனியின் காவலர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கும் முயற்சியை சீர்குலைக்கும் விதமாக திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சென்னையிலுள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார் சமுத்திரக்கனி.

பழிவாங்கும் நோக்கில் சென்னைக்கு மாற்றப்படும் சமுத்திரக்கனி, கைதிகளின் பாரா காவலராக போடப்படுகிறார். திருச்சி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சென்னையில் பி.எச்.டி படித்து வருகிறார். இந்த பி.எச்.டி மாணவரான ஹரிகிருஷ்ணன் காவல் துறையினரால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, கல்யாண மண்டபம், லாட்ஜ் என
வெவ்வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு வருகிறார். அந்த இடங்களுக்கு பாரா காவலராக அனுப்பப்படுகிறார் சமுத்திரக்கனி. ஹரிகிரிஷ்ணனின் சட்ட விரோத கைது ஒரு வார பத்திரிகையில் வெளிவர ஹரிகிரிஷ்ணனின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.

இத்தகைய சூழலை பார்க்கும் சமுத்திரக்கனி என்ன செயகிறார், ஹரிகிருஷ்ணன் ஏன் கைது செய்யப்படுகிறார், ஹரிகிருஷ்ணன் நிலைமை என்ன ஆகிறது, சமுத்திரக்கனி என்ன ஆகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.

சமுத்திரக்கனியின் காவல் துறை ரைட்டர் கதாபாத்திரம் சமுத்திரக்கனிக்கு ஒரு புதிய தோற்றம் மற்றுமின்றி அவருடைய நடிப்பு பாராட்டுதலுக்குரிய ஒரு புதிய மாற்றம். அதே போல் ஹரிகிருஷ்ணன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம், நண்பர் என நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒரு மாணவனாக சோலோவாக தனது நடிப்பில் அசத்தியுள்ளார். ஹரிகிருஷ்ணனின் நடிப்பு ஆடியன்ஸின் பாராட்டுகளை தாண்டி அவர் நடிப்பில் அடுத்த லெவலை அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். காவல் துறை கான்ஸ்டபிளாக வரும் திலீபன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு தன்னுடைய நடிப்பில் நியாயம் செய்துள்ளார். ‘யோகி’, ‘திருடா திருடி’, வெள்ளை யானை’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இப்படத்தில் ஹரிகிருஷ்ணனின் அண்ணனாக நடித்து தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார். எங்கும் செயற்கையான நடிப்பு இல்லாமல் எதார்த்தமாக நடித்துள்ளார் சுப்பிரமணியன் சிவா. துணை ஆணையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கூத்து பட்டறை’ பாபு தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய எதார்த்தமான நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் வெளுத்து வாங்குகிறார் டி.சி’யாக நடித்திருக்கும் பாபு. காவல் நிலையத்தில் பணியாளாக வேலை செய்யும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் நாயகன் அந்தோணியின் நகைச்சுவை வசனங்களும், நடிப்பும் இப்படத்திற்கு ஒரு பெரிய பிளஸ். படத்தில் எங்காவது தொய்வு இருக்கும் போது, சமுத்திரக்கனி மற்றும் காவலர்களிடம் உரையாடும் அந்தோணியின் நகைச்சுவை பேச்சு பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. வழக்கறிஞராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கவிதாபாரதி, பெண் காவலராக நடித்திருக்கும் இனியா ஆகியோர் தங்களுடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளனர்.

யுகபாரதி மற்றும் முத்துவேலின் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. கோவிந்த வசந்தாவின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்த்துள்ளது. நல்ல கதையை தேர்ந்தெடுத்து ‘ரைட்டர்’ படத்தை இயக்கியுள்ள பிராங்க்ளின் ஜேக்கப் காட்சி அமைப்பிலும், திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ‘ரைட்டர்’ படம், பா.ரஞ்சித்தின் மற்ற படைப்புகளை போல் இன்னும் பெரியதாக பேசப்பட்டிருக்கும். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு சராசரியே. அதேபோல் படத்தொகுப்பாளர் மணிகண்டன் சிவகுமார் இயக்குநரிடம் இன்னும் கொஞ்சம் கலந்தாலோசித்து தொய்வு இருக்கும் சில இடங்களில் கவனம் செலுத்தி கத்திரி போட்டிருந்தால் ‘ரைட்டர்’ படம் இன்னும் சற்று விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

‘ரைட்டர்’ திரைப்படம் காவலர்களின் அட்டூழியத்தை சுட்டி காட்டியிருந்தாலும், அதே சமயம் காவலர்களின் நலத்தை காக்க ஒரு சங்கம் தேவை என்பதையும் பதிவிட்டுள்ளது. “ரைட்டர்” திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய, பார்க்கவேண்டிய ஒரு திரைப்படமே.

‘ரைட்டர்’ படத்திற்கான மதிப்பீடு: 3.5/5

Leave a Response