ஈழத்தமிழரான பாரதிராஜா, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு சென்னையில் வசித்து வருகிறார். இலங்கையில் நடந்த போரில் தப்பித்து சென்னைக்கு அகதியாக கதாநாயகன் தன்னுடைய குழந்தை பருவத்தில் தன்னுடைய தந்தையார், தாய் ரோகினி மற்றும் அக்கா ரவீணாவுடன் சென்னையில் குடிபெயர்கிறார்கள். கதாநாயகன் வசந்த் ரவியின் தந்தையார் பாரதிராஜாவிடம் கடத்தல் தொழிலுக்கு உதவியாளராக பணியாற்றி இறந்து விடுகிறார். தந்தை இல்லாத குழந்தைகளை தாய் ரோகினி வளர்த்து வருகிறார்.
சிறுவனாக இருந்து வளர்ந்துள்ள நாயகன் வசந்த் ரவி தன்னுடைய தந்தை வழியில் அவர் தொழிலிலே பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் வசந்த் ரவியின் தாய் ரோகினியை பாரதிராஜாவின் மகன் கொலை செய்ய, பதிலுக்கு பாரதிராஜாவின் மகனை வசந்த் ரவி கொன்றுவிடுகிறார். இதன் காரணமாக பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி இடையே பகை வளர்கிறது. கொலை குற்றத்திற்காக பதினேழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகும் வசந்த் ரவி தன்னுடைய அக்கா ரவீணாவை தேடி வருகிறார்.
வசந்த் ரவியின் விடுதலை பற்றி அறியும் பாரதிராஜா, பழி தீர்க்க வசந்த் ரவி மற்றும் ரவீணாவை கொலை செய்ய அவர்களை தேடுகிறார். மீண்டும் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி சந்தித்து கொள்கிறார்களா? ரவீணா மற்றும் அவளுடைய குடும்பம் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘ராக்கி’ படத்தை உலகதரத்தை நோக்கி இயக்க முயற்சித்துள்ளார். படத்தின் கதை சிம்பிளாக இருந்தாலும் படத்தின் மேக்கிங் தரம் பாரட்டுதலுக்கு உரியது. அதே சமயம் படத்தில் நிரம்பி இருக்கும் வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகம் மட்டுமின்றி, பார்வையாளர்கள் முகம் சுளிக்க வைக்கிறது. வன்முறை காட்சிகளில் இடம்பெற்றுள்ள அருவருக்கத்தக்க காட்சிகளை தவிர்த்திருந்தால் ‘ராக்கி’ படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழுக்கு பதில் ‘U/A’ சான்றிதழ் வழங்கி இருந்திருக்கும். அதே சமயம் 18 வயதுக்கு குறைவான ஆடியன்ஸ் வரவு படத்திற்கு இருந்திருக்கும்.
ஷ்ரியாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ். பிளாஷ்பேக் காட்சிகளை ஆடியன்ஸ் புரிந்துகொள்ளும் வகையில் கருப்பு வெள்ளை நிறத்தில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஷ்ரியாஸ் கிருஷ்ணன். தர்புக்கா சிவாவின் உயிரோட்டமுள்ள பின்னணி இசை கதையோடு பயணித்தாலும், அருவருக்கத்தக்க காட்சிகளுக்கிடையில் வரும் பின்னணி இசை பார்வையாளர்களை பதற வைக்கிறது. இருப்பினும் அந்த இசை தவிர்க்க இயலாதது தான்.
பாரதிராஜாவின் வில்லத்தனமான நடிப்பு கொஞ்சம் புதுசு. கதாநாயகன் வசந்த் ரவி தான் நடித்த ‘தரமணி’ படத்தின் நடிப்பை விட இந்த படத்தில் தன்னுடைய நடிப்பில் மெருகேற்றியுள்ளார். அவருடைய வசன உச்சரிப்பில் ஹீரோயிசம் தெரிகிறது. எப்போதும் போல் ரோகினி தன்னுடைய நடிப்பில் தன் பணியை செய்துள்ளார். ரவீணா நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. தன்ராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்ரப் மல்லிச்செரியின் எதார்த்தமான நடிப்பு அட்டகாசம்.
மொத்தத்தில் ‘ராக்கி’ படத்தை இதயம் தடமானவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.
‘ராக்கி’ படத்திற்கான மதிப்பீடு: 3/5