இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வரக் காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான் – இயக்குனர் பிராங்க்ளின்

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் படம் “ரைட்டர்”. இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது .

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின், சமுத்திரக்கனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி, யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா .ரஞ்சித் பேசுகையில்,

“தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார். பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதித்திக்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஐந்து படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம். கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும். தவறான அரசியல் பேசக்கூடாது. எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன். ரைட்டர் படத்தை தயாரிக்க நான் முன்வந்த காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர். கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தங்கராஜாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது,

“தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. உழைக்கும் ஆட்களைக் கண்டால் அப்படி ரசிப்பேன். ரைட்டர் படம் அருமையான ஒரு குழு சேர்ந்து உழைத்த படம். ஒரு கூட்டு முயற்சி ஒரு கூட்டு படைப்பை இந்த படத்தில் நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது படமாக நினைத்து இந்த படத்தில் வேலை பார்த்தனர். உண்மையான உழைப்பை நாம் பேச தேவையில்லை. திரையில் பார்த்த உடன் மக்களே பேசுவார்கள். மிகப் பெரிய வெற்றி அடையும் வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தி பேசினார் .

இயக்குனர் பிராங்க்ளின் கூறியதாவது,

“இது எனக்கு முதல் மேடை. நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதல் நன்றி பா.ரஞ்சித் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அடிப்படை முறைகளையும் ரஞ்சித் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். சமுத்திரக்கனி அவர்களிடம் கதையை கூறியவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணலாம் என தெரிவித்தார். இப்படத்தில் தங்கராஜ் கதாபாத்திரம் உயிர் கொண்டு வர காரணம் சமுத்திரக்கனி அவர்கள்தான். இப்படத்திற்கு என் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கோவிந்த் வசந்தா அமைத்துள்ளார். கோவிந்து எனது சிறந்த நண்பர். இப்படத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் ஒரு நல்ல படத்தை உருவாக்க உதவி செய்துள்ளனர். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Leave a Response