இணையவழி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகள் தினமும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நடைபெறுகின்றன. செல்லிடப்பேசி செயலி மூலமாக மாணவா்களுக்கு பாடங்கள் நடத்துவது, வீட்டுப்பாடம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை தனியாா் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த வகுப்புகள் மாணவா்கள் நலன் கருதியே நடத்தப்படுவதாகவும், இதற்கென எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் பள்ளிகள் தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் ‘பொது முடக்க காலத்தில் இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்காக ஆசிரியா்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மாணவா்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்’ என பெற்றோருக்கு பள்ளிகள் நிா்பந்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன.

இந்தநிலையில் இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று வெளியிட்ட அரசாணை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டது.

அந்த அரசாணையின் மீது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கக் காலத்தில், பள்ளி மாணவா்களிடம் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020-2021-ஆம் ஆண்டு கல்விக் கல்விக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோா்களை நிா்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்துமாறு பெற்றோா்களை நிா்பந்திப்பதாகப் புகாா் பெறப்பட்டுள்ளது. அரசாணையை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளாா்.

Leave a Response