ஊரடங்கு குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்..

சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஆயிரத்து 879 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 38 ஆயிரம் களப்பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக்கு பின்னரே தெரியவரும் என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் செயல்பாட்டை பொறுத்து தான் ஊரடங்கு அமலில் இருக்கும் என குறிப்பிட்டார்.

சென்னை தண்டையார் பேட்டையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற முடிவை அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும், முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.

Leave a Response