அரசு உத்தரவிட்டால் சென்னையில் கடைகளை அடைக்க தயார்: வணிகர் சங்க தலைவர்..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கி நிர்வாகிகளிடம், கொரோனா தொற்று காலத்தில், தமிழக வணிகர்களின் பிரச்னைகள், அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் கோரிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அரசின் நிதித்துறை செயலாளரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று அளித்தனர். அதன் பிறகு விக்கிரமராஜா அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என்ற கோஷத்தோடு ஒரே ஒற்றை சாளர முறையில் ஒரே வகையான உரிமம் என்பதை மத்திய, மாநில அரசுகள் முன்னிலைப்படுத்தி தொழில் வணிகத்தை ஊக்கப்படுத்த வேண்டும். மூடி வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட அனைத்து காய்கறி மார்க்கெட்டுகளும் கட்டுப்பாடுகளுடன் உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும்.

பொது முடக்கத்தால் தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசு உரிய சிறப்பு கவனம் செலுத்தி, முறையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து திருமண மண்டபங்களை இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று சென்னை மாவட்டத்தில் மிக வேமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் முழுமையாக, குறைந்தது 15 நாட்கள் கண்டிப்பான முழுமையான ஊரடங்கை அமல்படுத்தினால், வணிகர்கள் முழு ஒத்துழைப்பையும் அளித்து கடைகளை அடைக்க தயாராக இருக்கிறோம். அரசு உரிய கவனம் செலுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response