ராணுவத்தை கொண்டு விரைவில் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன் – டிரம்ப்..

அமெரிக்கா முழுவதும் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால் நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் இடிமுழக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பை பதுங்கு குழிக்குள் தள்ளிய நிலையில்,

ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டிரம்ப், ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்றும் அமெரிக்க மக்களை பாதுகாத்து நாட்டின் சட்டத்திட்டங்களை நிலைநாட்டுவதே தனது கடமை எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தற்போது நடைபெறுவது அமைதியான போராட்டம் அல்ல எனக்கூறிய டிரம்ப், இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல் என கடுமையாக சாடியுள்ளார். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஓர் குற்றம் எனவும் டிரம்ப் பேசியுள்ளார்.

மாநில நிர்வாகம், போராட்டத்தை தடுக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் ராணுவத்தை கொண்டு விரைவில் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன் எனவும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஏற்கனவே போராட்டக்காரர்களை குண்டர்கள் என அமெரிக்க அதிபர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராணுவத்தை பயன்படுத்த உள்ளதாக மிரட்டல் விடுத்திருப்பது போராட்டக்காரர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது..

 

Leave a Response