மும்மொழியில் கலக்க வரும் நான்கு நாயகிகள்

‘மிராக்கிள் எண்டர்டைன்மென்ட்’ தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

இப்படத்தில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ் – லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.

நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார்.

‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படம் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மேலும் தகவல்கள் அதிவிரைவில்!

Leave a Response