2.0, பாகுபலி புகழுக்கு ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம்…

இந்திய சினிமாவில் ஒரு கற்பனை கதையை கொண்டு ஒரு புராண காலத்து படத்தை போல் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பாகுபலி – ஆரம்பம்’. இப்படத்தை தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்க, பிரபாஸ், ராணா, தமன்னா, அணுஷ்கா, நாசர் என இன்னும் பலர் நடித்திருந்தனர். இப்படம் முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களாக வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதை போல் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த 2.0 பிரமாண்ட வெற்றியை அடைந்தது. இப்படத்தின் வி.எப்.எக்ஸ் பணி சிறப்பாக பேசப்பட்டது.

இந்திய சினிமாவும் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் சாதனை புரியும் என்பதை எடுத்து சொல்லும் விதமாக இப்படங்கள் இருந்தன, உலக சினிமாவின் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியிலும் இப்படங்களின் வி.எப்.எக்ஸ் பெருமையாக பேசப்பட்டது.

இப்படங்களில் வி.எப்.எக்ஸ் இவ்வளவு பெருமையாக பேசப்பட்டதற்கு காரணம் இப்படங்களின் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர் ஸ்ரீனிவாஸ் மோகன். இவர் இதற்கு முன் இந்தியன், ஜீன்ஸ், எந்திரன், மாற்றான் என பல படங்களுக்கு வி.எப்.எக்ஸ் செய்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்துவரும் RRR திரைப்படத்திற்கு வி.எப்.எக்ஸ் பணி செய்து வருகிறார் ஸ்ரீனிவாஸ் மோகன்.

‘பாகுபலி – ஆரம்பம்’ மற்றும் 2.O திரைப்படங்களில் ஸ்ரீனிவாஸ் மோகனின் வி.எப்.எக்ஸ் பணியை பார்த்த ஆஸ்கர் விருது நிர்வாகம், ஸ்ரீனிவாஸ் மோகனை 2019’ம் ஆண்டுக்கான ஆஸ்கர் உறுப்பினராக நியமித்துள்ளனர். 2019’ம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வில், வி.எப்.எக்ஸ் பிரிவில் ஸ்ரீனிவாஸ் மோகன் வாக்களிப்பர். ஆஸ்கர் உறுப்பினர் என்பது, கலை போட்டி தேர்வில் அமர்த்தப்படும் ஜூரிகள் எவ்வாறு ஒரு கலைஞனை தேர்ந்தெடுப்பார்களளோ அதை போல் ஆஸ்கர் உறுப்பினர்கள், ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்ளும் ஒரு கலைஞனையோ அல்லது திரைப்படத்தையோ தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள்.

மொத்தத்தில் ஒரு இந்திய கலைஞன், ஆஸ்கர் விருதுக்கு வாக்களிக்க நியமிக்கப்பட்டுள்ளது நம்முடைய இந்திய திரையுலகிற்கு கிடைத்த மரியாதையும், பெருமையும் என்றே சொல்லவேண்டும். வாழ்த்துக்கள் மிஸ்டர் ஸ்ரீனிவாஸ் மோகன்.

Leave a Response