ராவணா கேள்விபட்டிருக்கோம்! அது என்ன ராவண்ணா?

கடந்த 2010 ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘களவாணி 2’ அதே விமல், ஒவியா, இயக்குநர் சற்குணம் கூட்டணியில் உருவாகியுள்ளது.

களவாணியில் எதார்த்தமான காதலையும், இயல்பான மனித வாழ்வையும் பதிவு செய்த இயக்குநர் சற்குணம், ‘களவாணி 2’ வில் உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசியிருக்கிறார். அரசியல் களம் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும், உள்ளாட்சி தேர்தலை விரிவாகவும், விளக்கமாகவும் இதுவரை எந்த படத்திலும் சொல்லவில்லை. அந்த குறையை ’களவாணி 2’ களைவதோடு உள்ளாட்சி தேர்தல் என்றால் என்ன? என்பதையும், உள்ளாட்சி தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறதாம்.

இப்படத்தில் அரசியல் வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ‘ராவண்ணா’ என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். அதாவது, ‘ஜி’, ’புரோ’ என்று பேச்சு வழக்கில் மரியாதையாக அழைப்பது போல,கிராமத்தில் ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக அவரது பெயரின் முதல் எழுத்துடன் அண்ணா என்ற வார்த்தையை சேர்த்து அழைப்பார்கள். டெல்டா மாவட்டங்களில் பிரபலமான இந்த வழக்கத்தை இயக்குநர் சற்குணம் முதல் முறையாக பயன்படுத்தியிருக்கிறார்.

அதன்படி, ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகாரை படத்தில் ராவண்ணா என்று அழைப்பார்களாம். படம் ரிலீஸான பிறகு இந்த ராவண்ணா புது டிரெண்டாகும் அளவுக்கு ரசிகர்களை கவர்கிறதாம்.

வரும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக உள்ள ‘களவாணி 2’ படம் சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள், ”படம் நிச்சயம் வெற்றி பெறும், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று கூறியதோடு, படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் கதாபாத்திரத்தையும், அதில் அவர் நடித்த விதத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார்களாம்.

கத்தி, அறுவா என்று ஆக்ரோஷத்தை காட்டாமல், இயல்பான நடிப்பால், எதார்த்தமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் பப்ளிக் ஸ்டாரின் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், ‘களவாணி 2’வுக்கு பிறகு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிப்பது உறுதி என்றும் படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.