தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரியோ கதாநாயகனாகவும், ஷெரின் காஞ்சவாலா கதாநாயகியாக அறிமுக நடிகர்களாக நடித்து ஜூன் 14 அங்கு உலகமெங்கும் ரிலீசாகிய திரைப்படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க யூடியூபில் பிரபலமான விக்னேஷ் காந்த் மற்றும் அவருடைய மற்ற யூடியூப் நண்பர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, மயில்சாமி மற்றும் அரசியல் பிரமுகரும் நடிகருமான நாஞ்சில் சம்பத் நடித்துள்ளனர்.
பெரும்பாலான பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், பிரபல நடிகர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் அல்லது பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகி சற்று நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது குறைந்த லாபமே ஈட்டி தந்தாலோ, அந்த நிறுவனத்துக்கோ அல்லது அதில் நடித்த பிரபல நடிகருக்கோ சினிமா மார்க்கெட்டில் பெயர் டேமேஜ் ஆகிவிடும். அப்படி டேமேஜ் ஆகிவிட்டால் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தாயாரிப்புக்கோ அல்லது அதில் கதாநாயகனாக நடித்த அந்த பிரபல நடிகருக்கோ மார்க்கெட்டில் வரவேற்பு குறைந்துவிடும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நிதியுதவி செய்பவர்கள் மீண்டும் அந்த தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்புக்கு நிதியுதவி செய்ய சற்று தயங்குவர். அதை போலவே அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த அந்த பிரபல நடிகரின் அடுத்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும், அதே சமயம் அந்த நடிகரின் சம்பளம் குறைய வாய்ப்புகள் அதிகம். இதனை சரிகட்டவே, இத்தகைய தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த கதாநாயகர்கள் படம் வெளியாகிய நான்கு அல்லது ஐந்து நாட்களிலிருந்து இரு வாரங்களுக்குள் வெற்றி விழா, நன்றி தெரிவிப்பு என பல பெயர்களை கொண்ட ஒரு விழாவை ஏற்பாடு செய்வார்கள். அந்த விழாவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், அந்த குழுவினர்கள் அவர்களுக்குளேயே ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வது வழக்கம். அதுவும் உடனடியாக, படம் வெற்றி என செய்தியாகிவிடும். இது தான் வழக்கம்.
‘நெஞ்சம்முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம், ஒரு சுமாரான பட்ஜெட்டில் நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டது. இப்படம் லாபம் ஈட்டியதா இல்லையா என்ற விவரம் அதை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான SK புரொடக்ஷன்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் சிவகார்த்திகேயனுக்கு தான் தெரியும். ஆனால் இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையிலுள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. முந்தைய பாராவில் குறிப்பிட்டுள்ளபடி, படக்குழுவினர் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர்.
இப்போது செய்தியின் தலைப்புக்கு போவோம்… விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் நடித்த மூத்த நடிகர்கள் ராதாரவி, மயில்சாமி மற்றும் பிரபல அரசியல் பிரமுகரும் நடிகருமான நாஞ்சில் சம்பத் ஆப்சென்ட். இந்த விழாவில் பேசியவர்களின் ஒரு சிலர் மட்டுமே இவர்களை பற்றி பாராட்டியே அல்லது நன்றி சொல்லியோ பேசினார்கள்.
விழாவுக்கு வராததை பற்றி, நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ நிருபர் நாஞ்சில் சம்பத்தை அவருடைய கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தனக்கு இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல் தெரியாது என்றும், தனக்கு எந்த வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் சற்று வருத்தமான குரலுடன் கூறினார். ராதாரவி மற்றும் மயில்சாமியை இந்த வெற்றி விழாவிற்கு அழைத்தார்களா அல்லது அவர்களும் நாஞ்சில் சம்பத் புறக்கணிக்கப்பட்டதை போல் புறக்கணிக்கப்பட்டார்களா என்பதை இனி தான் விசாரிக்கனும்.
மூத்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால்? ஒன்னும் சொல்வதற்கில்லை! இனி வரும் காலங்களிலாவது சிவகார்த்திகேயன் தன்னுடைய தவறை திருத்திக்கொண்டு, மூத்த கலைஞர்களை விழாக்களுக்கு அழைக்காமல் புறக்கணிப்பதை தவிர்ப்பார் என்று எண்ணுவோம்!