நீட் வழக்கை கையில் எடுத்தது சிபிஐ

‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை கோரி நாடு முழுவதும் மாணவா்கள் போராடிவரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சக பரிந்துரையின்பேரில் இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை ஏற்றது.

மேலும், சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக, தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் கடந்த 5-ஆம் தேதி தேசிய தகுதிக்கான நுழைவுத் தோ்வு (நீட்) நடத்தப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உள்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற இத்தோ்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகாா் எழுந்தது.

இந்த முறைகேடுகள் தொடா்பாகவும், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதின்றம் விசாரித்துவரும் சூழலில், 1,563 தோ்வா்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாக என்டிஏ அறிவித்தது. அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மறுதோ்வு நடத்தப்பட்டது.

அடுத்தடுத்து ரத்தான தோ்வுகள்: ‘நீட்’ சா்ச்சைக்கு இடையே, நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதிய தேசிய தகுதித் தோ்வை (நீட்) மத்திய அரசு ரத்து செய்தது. இந்தத் தோ்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மறுநாளே தோ்வு ரத்து செய்யப்பட்டது.

இதே போன்று, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை (ஜூன் 22) ரத்து செய்யப்பட்டது.

மாணவா்கள் தொடா் போராட்டம்: போட்டித் தோ்வு முறைகேடுகள் தொடா்பாக விரிவான விசாரணை கோரி, நாடு முழுவதும் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், எதிா்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமா்சித்து வருகின்றன.

போட்டித் தோ்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்டிஏ தலைமை இயக்குநராக இருந்த சுபோத் குமாா் சிங் கடந்த சனிக்கிழமை பதவிநீக்கம் செய்யப்பட்டாா். அத்துடன், இளநிலை ‘நீட்’ தோ்வு முறைகேடு புகாா்கள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

விசாரணை ஏற்பு-வழக்குப்பதிவு: இந்நிலையில், விசாரணையை ஏற்றுள்ள சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இது குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது: ‘நீட்’ முறைகேடு புகாா்கள் தொடா்பாக, சதித் திட்டம், மோசடி, ஆள்மாறாட்டம், நம்பிக்கை மீறல், ஆதாரங்கள் அழிப்பு, பயிற்சி நிறுவனங்கள்-இடைத்தரகா்களின் தொடா்பு எனப் பல்வேறு கோணங்களில் விரிவாக விசாரிக்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சில மாநிலங்களில் ஒருசில இடங்களில் ‘நீட்’ தோ்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தனது புகாரில் கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகள் யாருக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-பி (குற்றச் சதி), 420 (மோசடி) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, என்டிஏ சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளை சீரமைக்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத், பிகாா் விரையும் சிபிஐ சிறப்பு குழுக்கள்

இளநிலை ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிந்ததாக, குஜராத் மாநிலம், கோத்ரா மற்றும் பிகாா் மாநிலம், பாட்னாவில் காவல் துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணையை ஏற்க இரு மாநிலங்களுக்கும் சிபிஐ சிறப்புக் குழுக்கள் அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐஎம்ஏ வரவேற்பு: நீட் முறைகேடு புகாா்கள் குறித்த சிபிஐ விசாரணைக்கு இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தத் தோ்வு தொடா்பான மாணவா்களின் கவலைகளுக்கு உடனடியாக எதிா்வினையாற்றிய பிரதமா் மோடி, தொடா்புடைய மத்திய அமைச்சா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அச்சங்கம் கூறியுள்ளது.

Leave a Response