ஊழல் குற்றவாளியின் உதவியை நாடிய ஐசரி கணேஷ்…

23 ஜூன் 2019 அன்று நடக்கவிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல். இந்த தேர்தலில் நாசர் தலைமையில், விஷால் முன்னிலையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் சாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. விஷால் அணியில் இருந்த ஒரு சிலர் ஐசரி கணேஷ் அணிக்கு தாவியதை பற்றி நம்முடைய முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம். விஷால் அணியில் உள்ள பூச்சி முருகன், நடிகர் ஜெரால்டு, நடிகர் கருணாஸ், நடிகர் ராதா ரவி மற்றும் மறைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் ஆகியோருக்கு தான் நடிகர் சங்கத்தில் பெறுபான்மையான உறுப்பினர்களாக இருக்கும் நாடக நடிகர்களை நன்கு அறிந்தவர்கள்.

சென்ற முறை நடந்த தேர்தலின் போது, ராதாரவி மற்றும் சரத்குமார் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நடிகர்கள் மத்தியில் எடுத்து சொல்லப்பட்டது. குறிப்பாக நாடக நடிகர்கள் மத்தியில் பூச்சி முருகன், ஜே. கே.ரித்தீஷ் ஜெரால்டு, கருணாஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்து விஷாலை தலைவராக வெற்றி பெற வைத்தார்கள். ராதாரவி அவருடைய அணிக்காக அன்று நாடக நடிகர்கள் மாற்றும் சினிமா நடிகர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், அவர் அணியின் முக்கிய போட்டியாளர்களான ராதாரவி, சரத்குமார் என பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை மட்டுமே தழுவினர்.

நடிகர் சங்கத்தில் ஊழல் செய்தவர்களான சரத்குமார், ராதாரவி மற்றும் சிலரை, வெற்றிபெற்ற விஷால் அணியினர் அவர்கள் மீது வழக்கினை தொடுத்தனர். ராதாரவி, சரத்குமார் மற்றும் சிலர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து, தற்காலிகாகவும், நிரந்தரமாகவும் நீக்கினார். நடிகர் சங்கத்தில் இந்த சீரமைப்பு நடக்கும்போது, ஐசரி கணேஷ் விஷால் அணிக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவரும் ராதாரவி, சரத்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், அவர்களை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வந்தவர் தான் இந்த ஐசரி கணேஷ். சில மாதங்களுக்கு முன்பு விஷாலுக்கும், ஐசரி கணேஷுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு என முற்றிவிட்டது. இதன் காரணமாக தான் ஐசரி கணேஷின் சாமி சங்கர்தாஸ் அணி என ஒரு புதிய அணி இந்த நடிகர் சங்க தேர்தலில் உதயமானது.

சென்னையில் உள்ள நடிகர்களிடம் சற்று சுலபமாக பிரச்சாரம் செய்ய முடிந்த ஐசரி கணேஷ் அணிக்கு, வேறு மாவட்டங்களில் இருக்கும் நாடக நடிகர்களை அணுகுவதற்கு ஏற்ப சரியான ஆட்கள் இல்லை என்பது பெரிய சவாலாக இருந்தது. காரணம், நாடக நடிகர்களை நன்கு அறிந்த பூச்சி முருகன், ஜெரால்டு, கருணாஸ் என அனைவரும் விஷால் அணியில் உள்ளனர். நாடக நடிகர்களை நன்கு அறிந்தவர் வேறு யாரும் இல்லையா என யோசித்த ஐசரி கணேஷ் பார்வைக்கு சிக்கியது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ராதாரவி மட்டுமே.

அன்று நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்குவதற்கு, விஷாலுக்கு துணையாக நின்ற ஐசரி கணேஷுக்கு அன்று ராதாரவி செய்தது தவறாக தெரிந்தது. இன்று நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்க ஒரு சரியான ஆள் தேவை என்பதினால், ஐசரி கணேஷுக்கு ராதாரவியின் குற்றங்கள் மறைந்துவிட்டன. நாடக நடிகர்களை ஐசரி கணேஷ் அணிக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வதற்கு, ராதாரவியை பிரச்சார பீரங்கியாக ஒப்பந்தம் செய்துள்ளாராம் ஐசரி கணேஷ். இதில் என்னடா ஒப்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்?

அதாவது, ராதாரவி ஐசரி கணேஷ் அணி வெற்றிபெற பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி ராதாரவியின் பிரச்சாரம் சாதகமாக அமைந்து, ஐசரி கணேஷ் அணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ராதாரவி மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்பது தான் ஐசரி கணேஷுக்கும், ராதாரவிக்கும் இடையில் போடப்பட்டிருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் என்று சொல்லப்படுகிறது. இந்த எழுதப்படாத ஒப்பந்தப்படி, ராதாரவி சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கிளம்பி, மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை சென்று அங்கு ஐசரி கணேஷ் அணி சார்பாக நடிகர் சங்க தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது மட்டுமின்றி ஐசரி கணேஷ் அணிக்கு பிரச்சாரம் செய்வதற்க்காக ராதாரவிக்கு ஒரு பெரிய இரட்டை லகரத்தில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

ஊழல் குற்றத்திற்க்காக நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ராதாரவியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஐசரி கணேஷ் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்கம் பணிகள் நேர்மையாக நடக்குமா? என நடிகர் சங்க உறுப்பினர்கள் புலம்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response