நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் கொடுத்த நன்கொடையும், கடனும்! ஒரு புலனாய்வு ரிப்போர்ட்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இம்மாதம் 23ம் தேதி சென்னையில் நடைபெறவிற்கிறது. இந்த தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன. நாசர் தலைமையிலும், விஷால் முன்னிலையிலும் ‘பாண்டவர்’ அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலும், தொழிலதிபரும் நடிகருமான ஐசரி கணேஷ் முன்னிலையிலும் ‘சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர்.

முன்பு நாம் எழுதிய கட்டுரையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் உருவாகிய புதிய அணியை பற்றிய காரணங்களை நாங்கள் ஆய்வு செய்து பதிவிட்டோம்.

இரு அணியை சேர்ந்த பெரும்பாலான தேர்தல் போட்டியாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களுடைய விண்ணப்பங்களை சமர்பித்துவிட்டனர். இரு அணிகளிலும் ஒரு சிலர், படபிடிப்புகளில் உள்ள காரணத்தினால் மட்டுமே இதுவரை தங்களுடைய போட்டியாளர் விண்ணப்பத்தினை சமர்பிக்கவில்லை. போட்டியாளர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்பதினால், இன்னும் விண்ணப்பம் சமர்பிக்காதவர்கள் நாளை சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் சூடு பிடித்துள்ள நேரத்தில், தேர்தலில் போட்டியிட கூடாது என்று விஷால் தான் மிரட்டப்பட்டதாக பகிரங்கமாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். என்னடா, நாசர் தலைமையிலான பாண்டவர் அணி எந்த ஒரு ஊழலையும் செய்யாத போது எதிர்த்து போட்டியிடும் ஐசரி கணேஷின் சங்கர்தாஸ் அணி, பாண்டவர் அணியை வீழ்த்த எப்படி பிரச்சாரம் செய்யும் என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் யோசித்து இருப்பர்.

ஐசரி கணேஷுக்கு ஆதரவானவர்கள் ஊடகத்திடம் பேசும்போதும் சரி, மற்ற நடிகர் சங்க உறுப்பினர்களிடம் பேசும்போது சரி, ஐசரி கணேஷ் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர். அடடா இப்படியா! என்று , நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட பெரிய அளவில் உதவியவர்கள் யார் யார் என்று நம்முடைய
‘ஒற்றன் செய்தி’ நிருபர் குழு விசாரிக்க ஆரம்பித்தது.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு ஐசரி கணேஷ் போல் பலரும் உதவியுள்ளனர். அதில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடையும் கொடுத்துள்ளனர், கடனாக நிதியுதவியும் செய்துள்ளனர். பெரிய அளவில் நன்கொடையும், கடனாக நிதி உதவியும் கொடுத்தவர்கள் யார் யார் என்று இப்போது பார்ப்போம்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை கொடுத்தவர்கள்:
1. லைக்கா புரொடக்ஷன்ஸ் – ₹ 1 கோடி
2. ஐசரி கணேஷ் – ₹ 1 கோடி
3. நடிகர் கார்த்தி சிவகுமார் – ₹ 1 கோடி
4. திரைப்பட தயாரிப்பாளர் ஆல்பர்ட் – ₹ 50 லட்சம்
5. நடிகர் விஷால் – ₹ 37 லட்சம்.
இவர்களை தவிர்த்து இன்னும் பலர் நன்கொடை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு கடனாக நிதி உதவி செய்தவர்கள்:
1. கல்வியாளர், தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளரான ஏ.சி.சண்முகம் – எந்த ஒரு வட்டியும் இல்லாமல் ₹ 3.5 கோடி
2. ஐசரி கணேஷ் – 1.1% வட்டிக்கு ₹ 1.5 கோடி
இதை தவிர்த்து இன்னும் சிலர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு கடனாக நிதி உதவி செய்துள்ளனர். சிலர் கொடுத்த கடன், நடிகர் சங்கம் திருப்பி செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இல்லாமல் சென்னையிலும், மலேசியாவிலும் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர விழாவில் தோராயமாக தலா ₹ 9 கோடி என மொத்தமாக தோராயம் ₹ 18 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது நடிகர் சங்கம்.

இப்படி இருக்க, ஐசரி கணேஷ் தான் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று சொல்கிறார்கள் ஒரு சிலர்.

ஐசரி கணேஷ் தான் நடிகர் சங்கத்திற்கு கொடுத்த நன்கொடைக்கு மாறாக ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன் பெயரை அந்த நடிகர் சங்கம் கட்டிடத்தில் அமைக்கப்படும் ஒரு அரங்குக்கு பெயரிடப்படுகிறதாம். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களுடைய கல்லூரி விழாக்களுக்கு நடிகர், நடிகைகளை அழைத்து அந்த கல்லூரியின் மதிப்பினை உயர்த்தும் வகையில் விளம்பரம் செய்வது வாடிக்கை. அப்படி நடிகர், நடிகைகளை அழைத்து ஒரு விழா நடத்த வேண்டுமென்றால், நடிகர் நடிகைகளுக்கு பணம் கொடுத்தது வரவைப்பது வழக்கம். பணம் மட்டுமே போதாது, அந்த கல்வி நிறுவனத்திற்கு நடிகர் சங்கத்துடன் ஒரு நல்லுறவு இருக்க வேண்டும். இதன் காரணமாக தான் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில்.வரவேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம். இந்த மூன்று ஆண்டுகளில் கமல், விஷால், கார்த்தி என நடிகர் சங்கத்தில் அதிக ஈடுப்பாடில் இருந்தவர்களை அவ்வப்போது அவர் நடத்திய அவருடைய கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார், இந்த நடிகர்களும் பெரும்பாலான அழைப்பை ஏற்று அந்த கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தொகை விவரம் நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் மட்டுமே. குறிப்பிடப்பட்டுள்ள தொகை தோராயமானவையே. சம்மந்தப்பட்டவர்கள் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதில் ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

Leave a Response