ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து ஆட்சி செய்கின்றனர் – கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, 2 – வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாகமலை புதுக்கோட்டை, தனக்கன்குளம், சீனிவாச நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

திருப்பரங்குன்றம் மலையை ஏலம் விட்டனர். நீங்கள் தடுத்திருக்காவிட்டால் மலை காணாமல் போயிருக்கும். மணல், கனிம வளங்கள் சுரண்டப்பட்டு விட்டன. இப்பகுதி நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதை இல்லை.

ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து ஆட்சி செய்கின்றனர். ஏழையாக இருந்தால் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள் என்றும் ஏழைகளை பாதுகாத்திருந்தால் அவர்களுக்கு வாழ்வு இல்லை.

நல்ல கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், நான் தலைவர் இல்லை என்றும், நீங்கள் தான் தலைவர்கள் என்றார். உங்களுக்கு கடன் பட்டுள்ளேன். எனது எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான். எனவே டார்ச் லைட்டுக்கு ஓட்டளியுங்கள், என்றும் கூறினார்.

தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார். தமிழகம் பாலைவனம் போல் இருப்பது மாதிரியும், இங்கு கொண்டு வர முடியாதது போல் ஆட்சியாளர்கள் நடிப்பதாக தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு குழாய் அமைத்து தண்ணீர் தர முடியும் என்றும் அவர் கூறினார். பல கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், ஓட்டுக்கு பணம் வாங்குவது, நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல் ஆகிவிடும் என்றார்.

Leave a Response