கோடை விடுமுறைக்கு தயாராகும் “களவாணி 2”..!

ஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும். அந்த வகையில் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது.
கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது. விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இது கண்டிப்பாக ரசிகர்களால் கவனிக்கப்படும். களவாணி 2வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக 90ML படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள்.
‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் கூட அந்த பாடலை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கிறார். மே 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

Leave a Response