தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது – வைகோ காட்டம்..!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.

விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்குத் திடலில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியது: பாஜக ஆட்சியில் பொறியியல் படித்த மாணவர்கள் ரூ. 7 ஆயிரம் ஊதியத்திற்குச் செல்லும் நிலை உள்ளது. மேலும், தமிழ்நாட்டில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது.

ஜிஎஸ்டியால் சிறு வியாபாரிகள் சீரழிக்கப்பட்டுள்ளனர். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிய நிலையில் 2 ஆயிரம் பேருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு, மேக்கேதாட்டு, தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.

ஒரே சமயம், ஒரே மொழி என்று கூறி நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கக் கூடாது என்பதற்காகத்தான் காவல் துறை மூலம் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்தியாவில் அமைதியான சூழல் நிலவ, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், திமுக வேட்பாளர் ஞானதிரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை ஆகிய பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.

Dailyhunt

Leave a Response