பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – வைகோ மீது வழக்குப் பதிவு..!

கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடன் இருந்த 403 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை – தூத்துக்குடி சந்திப்பான காவல்கிணறுவில் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ‘Gobackmodi’ என கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்டனர்.

இதனை அடுத்து, பாஜகவினர் சிலர் கூட்டத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர், வைகோ உள்ளிட்ட மதிமுக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கல்வீச்சில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் தொடர்பாக 50 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 403 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Response