சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்..!

படத்தின் தொடக்கத்தில் ஒருவரை சம்பவம் செய்கிறார் விதார்த். அதனால் தலைமறைவாகிறார். இன்னொரு பக்கம் பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அஜ்மல், அதை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார். சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்யும் நிவாஸ் ஆதித்தனால், நந்தன் லோகநாதனுக்கும், காயத்திரிக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.

விதார்த்தையும், நந்தனையும் போட்டுதள்ள துடிக்கிறார் அசோக். இதற்கிடையே விதார்த்தால் வெட்டுப்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது கணவரை போட்டுத்தள்ள காத்திருக்கிறார் ராதிகா ஆப்தே. சம்மந்தமே இல்லாத இந்த ஐந்து பேரும், ஒரு புள்ளியில் எப்படி இணைகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லுகிறது சித்திரம் பேசுதடி 2. வழக்கமாக சாதுவான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த விதார்த்துக்கு இப்படத்தின் மூலம் ரவுடி புரோமோஷன். ஆக்ஷன் ஹீரோவாக முன்னேற முயன்றிருக்கிறார். அதற்காக ஆர்பாட்டம் எல்லாம் செய்யாமல், அமைதியாக அடக்கி வாசித்து அசத்துகிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ராதிகா ஆப்தே. நெல்லை வட்டார வழக்கில் அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. விதார்த்துடனே இருந்து கொண்டு அவருக்கு எதிராக சதி செய்யும் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார் அசோக். கையறு நிலையில் தவிக்கும் அஜ்மலாகட்டும், விலைமாதுவாக நடித்திருக்கும் ப்ரியா பேனர்ஜியாகட்டும், படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக காயத்திரியின் அப்பாவி நடிப்பு ரசிக்க வைக்கிறது.

ஒவ்வொருவரை பற்றியும் தனியாக எழுத வேண்டும் என்றால், எக்ஸ்ட்ரா ஷீட் தான் வாங்க வேண்டும். அந்தளவுக்கு ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. நிறைய நடிகர்களை படத்தில் நடிக்க வைத்தால், அலுப்பு ஏற்படாது என்பதற்காக திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். ஒரு வித்தியாசமான படைப்பை தர முயற்சித்திருக்கும் இயக்குனர் ராஜன் மாதவை பாராட்டலாம்.

படத்தில் பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கிரிக்கெட் வீரர் பிராவே நடனமாடும், “ஏண்டா…ஏண்டா…” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஷஜன் மாதவின் பின்னணி இசையும் படத்தின் டெம்போவை கூட்டுகிறது. விதவிதமான கதாபாத்திரங்கள். விதவிதமான மனிதர்கள். அத்தனையையும் அருமையாக படம்பிடித்திருக்கிறது பத்மேஷின் கேமரா.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை அமைத்த விதமும், அதை படமாக்கிய விதமும் அருமை. கரணம் தப்பினால் மரணம் என்ற ஒரு திரைக்கதையை, மிக தெளிவாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ஜே.வெங்கட்ராமன். கொஞ்சம் சொதப்பிருந்தால், படம் புரியாமல் போயிருக்கும்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், இந்த சித்திரமும் பேசும்படியாக தான் இருக்கிறது.

Leave a Response