பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால் பெருமையுடன் அதை ஏற்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரின் பொன்மலை பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்னெடுத்த, “தேசம் காப்போம் மாநாட்டில்” தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; இந்துத்துவ சக்திகளாலும், பாஜகவினராலும் இலவசமாக வழங்கப்படும் தேசத் துரோகி பட்டத்தை, ஏற்க எந்த தயக்கமும் இல்லை என்றார்.
அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும். ஆனால், தேசத்தை ஆளுபவர்களால், ஆபத்து வந்துள்ளதாக ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
மேலும், ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று ஆதார ஆவணங்களுடன் நிரூபிக்க பாஜக அரசு தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார். உயர்சாதிக்கு 10 இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.