பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசி வருவது ஒருநாடகம் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அ.ம.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் மீண்டும் இணையமாட்டோம் எனவும், துரோகிகளிடமிருந்து விலகி வந்துவிட்டோம் இனி சேர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அத்வாலே அவருடைய ஆசையை கூறியுள்ளதாக தெரிவித்த அவர்,பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பேசுவது போன்று தம்பிதுரை நாடகமாடி வருவதாகவும்,ஏதோ ஒரு காரணத்திற்காக தான் அதிமுகவினர் இந்த நாடகத்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவுகளை பிரதமர் மோடி தான் நிறைவேற்றி வருகிறார் என்கிற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்,தமிழ் நாட்டிற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மத்திய அரசு எவ்வாறு எம்.ஜி.ஆர் மற்றும்ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவதாக கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.