எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் எச்.ஐ.வி. இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று கடந்த 1-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சபதம் எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தில் கடந்த 3-ந் தேதியே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. உள்ள ரத்தத்தை செலுத்தி, அரசே அந்த இளம்பெண்ணை எச்.ஐ.வி நோய்க்கு உள்ளாக்கி இருப்பது அ.தி.மு.க. அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது.
ரத்த தானம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்து அவரும் தற்போது உயிரிழந்திருப்பது தமிழக அரசின் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படும் ரத்தங்களின் பாதுகாப்பின் மீது மிகப்பெரிய கேள்வியையும், சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.சாத்தூரில் நடைபெற்ற கொடூரமான, மனித நேயமற்ற சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இதேபோன்ற, சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்போம்’ என்றார். ஆனால் அவரும், அவருடைய ஆட்சியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் பொறுப்பற்ற நிர்வாகத்தால் விலை மதிப்பற்ற உயிர்களுக்கு ஆபத்தை உண்டாக்குவதில் மும்முரமாக செயல்பட்டது இப்போது சாத்தூரிலும், சென்னை மாங்காட்டிலும் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவையை மதித்து, அந்த ரத்தங்களை எல்லாம் உரிய முறையில் சேமித்து வைத்து அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை-எளிய, நடுத்தர மக்களை காப்பாற்றிட அ.தி.மு.க. அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது என்பதற்கு இதுவே சாட்சி. இப்படியொரு மோசமான நிர்வாகத்திற்கு வித்திட்ட குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும், திறமையான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.