பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் – கனிமொழி..!

பாஜகவுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக அவர், கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவ கவுடா ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின், “பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் அமையும் கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார், அதில் பல மாநில முதல்வர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் இணைகின்றனர். எனவே மனப்பூர்வமாக இதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். மேலும் இதுதொடர்பாக தலைவர்கள் அனைவரும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, பாஜக எதிர்ப்புக் கூட்டணிக்கான முயற்சிகள், அந்தக் கட்சியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் தேவை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதைப் போல, மதவாத பிஜேபியையும், ஊழல் அஇஅதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response