பட்டாசு வெடிக்க, இசை முழங்க எம்எல்ஏ “தங்க தமிழ்ச்செல்வன்” ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கமான உண்ணாவிரதம் போலவே இது இல்லை. மாறாக பட்டாசு வெடிக்க, இசை முழங்க, தடபுடலாக நடந்து வருகிறது இந்த உண்ணாவிரதப் போராட்டம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தத்தமது தொகுதிகளில் உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. வைகை அணை சாலையில் எம்ஜிஆர் சிலை பின்புறம் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

பெரும் திரளான பாட்டிமார்கள், பெண்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு தங்களது தொகுதியை புறக்கணித்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தாத மக்கள் அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு போராட்டம் நடத்துவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை மாலையில் டிடிவி தினகரன் வந்து முடித்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளார். தகுதி நீக்கம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதில்லை என்ற முடிவை தினகரன் தரப்பு எடுத்துள்ளது. இந்த நிலையில் உண்ணாவிரதம் உள்ளிட்டவை மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்க முடிவு செய்து களம் இறங்கியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் சும்மாவே கூட்டத்தைக் கூட்டி மிரள வைப்பார். அந்த வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response