தமிழக கோயில்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – எச்.ராஜா..!

தமிழக இந்துச் சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. அப்போது அவர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்றால் சென்னையில் இம்மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அதுமட்டுமின்றி டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்கள் முன்பும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்.

இந்துச் சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கவிதா கைது செய்யப்பட்டதைக் கண்டு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று கூட்டம் நடத்தினால் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

‘சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு’ வேண்டாம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால் தமிழக இந்துச் சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் ரூ.300 கோடி அளவுக்கு சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார். பழனி கோயில் மூலவர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கும் ஐம்பொன் சிலையிலும் தங்கம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழக இந்தச் சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் சிலைக் கடத்தல், உண்டியல் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response