அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் கட்சியில் இணைத்து கொள்ள தயார் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் செல்லாது என நீதிபதி சுந்தரும் முரண்பட்ட தீர்ப்பளித்தனர்.
ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி ஒருவர் விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளார். அதனால் இந்த வழக்கில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை செல்லும் முதல்வர் பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் திரும்பி வந்தால் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்களா? அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது. திரும்பி வருபவர்கள் கண்டிப்பாக கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் திரும்பி வந்தால் அவர்களை கட்சியில் இணைத்து கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாது என முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.