தனிக் கட்சியை துவங்கினார் “திவாகரன்”..!

மன்னார்குடியில், திவாகரன், ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்ற, தனிக் கட்சியை துவங்கினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர், திவாகரன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், உடன் பிறவா சகோதரி சசிகாலாவின், தம்பி இவர். சசிகலா அக்கா மகன் தினகரனுடன், இவருக்கு மோதல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, சசிகலாவுடனும் மோதல் உருவானது.

இதையடுத்து, ‘அவர் என் சகோதரி அல்ல; முன்னாள் சகோதரி’ என, திவாகரன் கூறியிருந்தார்.சசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ‘அம்மா அணி’ என்ற பெயரில், தன் ஆதரவாளர்களுடன், திவாகரன் தனித்து செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று, மன்னார்குடியில், அம்மா அணி என்ற பெயரை மாற்றி, ‘அண்ணா திராவிடர் கழகம்’ என, கட்சி பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்தார்.கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொடியின் மைய பகுதியில், பச்சை நிற நட்சத்திரம் உள்ளது. கட்சிக்கு, தனி அலுவலகம் துவங்கியுள்ள திவாகரன், அங்கு நேற்று, கட்சிக்கொடி ஏற்றினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநில அளவிலான நிர்வாகிகள் பட்டியலும், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளராக திவாகரன் பெயரும் இடம் பெற்றுள்ளது.நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:கட்சி வேறு, உறவு வேறு என, இருந்து இருந்தால், டி.டி.வி.தினகரன், இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.

தேர்தலில் பண பலத்தை எதிர்ப்பது, இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை ஆக்கப்பூர்வமாக வழி நடத்துவதே, எங்கள் கட்சியின் கொள்கை.எங்கள் கட்சிக்கு, யாரும் போட்டி கிடையாது. அடித்தளத்தை நல்ல விதமாக அமைத்து, அதன் பின், எங்களுடைய பராக்கிரமங்களை வெளிப்படுத்துவோம்.அ.தி.மு.க.,வில் நாங்கள் இணைவதாக கூறும் தகவல் பொய்யானது. இதுபோன்ற வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கவே, புதிய கட்சி துவங்கியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Response