சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்:அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார்..!

செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக வெளியான செய்தி அதன் பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல் பகிர்வு தொடர்பாக விளக்கமான அறிக்கையை கேட்டிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் ஜூன் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பதை உறுதி செய்வதாக விளக்கமளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பெற்று தேர்தல் காலங்களில் பயன்படுத்தியதும், ஃபேஸ்புக் நிறுவனமும் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response