ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின் பிரச்சினையை சரி செய்ய தாமதம் ஆகிறது: அமைச்சர் தங்கமணி..!

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு பழுதடைந்த மின்மாற்றிகளை சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டதை குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, 2006 முதல் 2011ம் ஆண்டுக்கு இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில், கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்ததை சுட்டிக் காட்டி, அப்போதைய அரசில் இருந்த மின்வெட்டால் அவதிப்பட்டு, மக்கள் தொலைபேசியில் அழைத்து மின்வெட்டு மின்வெட்டு என்று புலம்பி இருப்பார்கள் என கிண்டலாக குறிப்பிட்டார்.

நேற்று ஏற்பட்ட மின்வெட்டுக்கு, திருவொற்றியூர் பகுதியில் நடக்கும் மெட்ரோ ரயில் வேலைகள், தொலைபேசி மற்றும் நெடுஞ்சாலை துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள்தான் காரணம் என்று தங்கமணி விளக்கம் அளித்தார்.

அதேநேரம், பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு பிரச்சினை தாமதமாக சீரமைக்கப்படுவதற்கான ஒரு காரணத்தையும் தங்கமணி தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான டிரான்ஸ்பார்மர்களை அமைப்பதற்கான காப்பர், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பெறப்பட்டு வந்ததாகவும் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் அங்கிருந்து காப்பர் பெற முடியாத சூழல் உருவாகி, டிரான்ஸ்பார்மர் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஸ்டெர்லைட்டை மட்டும் நம்பாமல், மாற்று வழிகள் மூலம் டிரான்ஸ்பார்மர்கள் தயார் செய்யப்பட்டு பழுதடைந்தவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

Leave a Response