சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம் சரியில்லை என்று கூவிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் சிஸ்டம் சரியா?

ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய இளைய.மகள் சவுந்தர்யா இயக்கிய மோஷன் கேப்சர் திரைப்படம் ‘கோச்சடையான்’. இந்த திரைப்படம் 2014ம் ஆண்டு வெளிவந்து பெருந்தோல்வியை சந்தித்தது.

அப்போது இப்படத்தை ‘மீடியாஒன் குளோபல் எண்டெர்டெய்ன்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்தது. படம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கொண்ட திரைப்படம் என்பதால் படத்தின் பட்ஜெட் சற்று அதிகமே. இந்த நிலையில் மீடியா ஒன் நிறுவனம், ‘ஆட் பெரோ’ என்னும் ஒரு நிறுவனத்தை அணுகி ‘கோச்சடையான்’ பட தயாரிப்பில் இணை தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டது. அப்போது திரைப்பட வெளியீடு உரிமையையும் ஆட் பெரோ நிறுவனத்திற்கு எழுதி கொடுத்தது தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன். மீடியா ஒன் மற்றும் ஆட் பெரோ தயாரிப்பு கூட்டணி ஒப்பந்தத்தில் மீடியா ஒன் நிர்வாகத்திற்காக, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் பொறுப்புறுதியாளராக(கெரெண்டார்) கையொப்பமிட்டுள்ளார். அதாவது ஆட் பெரோ நிறுவனத்திற்கு, மீடியா ஒன் மூலமாக திருப்பி சேரவேண்டிய பணத்தை மீடியா ஒன் செலுத்த தவறினால் லதா ரஜினிகாந்த் தான் பணத்தை திருப்பி கொடுப்பதாக அந்த பொறுப்புறுதியில் கையொப்பமிட்டுள்ளார்.

ஆட் பெரோ நிறுவனத்திற்கு, மீடியா ஒன் நிறுவனம் பணத்தை திருப்பி தராததால், ஆட் பெரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. அப்போது லதா ரஜினிகாந்த் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். நீதிமன்றத்தில் தன்னுடைய பெயர் சேர்க்கப்பட்டதால், பயந்துபோன லதா ரஜினிகாந்த் சில போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த ஆவணங்கள் போலி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, லதா ரஜினிகாந்த் நீதிபதியினால் கண்டிக்கப்பட்டர் என்பது வேறு கதை.

பண பிரச்சனை, அதில் லதா ரஜினிகாந்த் பொறுப்புறுதி பற்றி விசாரிக்கப்பட்ட வழக்கு இறுதியாக உச்ச நீதிமன்றம் வந்தடைந்தது. பிப்ரவரி 20, 2018 அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகை மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அமர்வு நீதிமன்றம் வழக்கை ஜூலை 3, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அப்பிடியே மீடியா ஒன் நிறுவனத்திற்கும், லதா ரஜினிகாந்துக்கும் ஒரு செக்கையும் வைத்தது. அதாவது மீடியா ஒன் நிறுவனம் ஆட் பெரோ நிறுவனத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையை மூன்று மாத காலத்திற்குள் ஆட் பெரோ நிறுவனத்திற்கு திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மீடியா ஒன் நிறுவனம் அப்படி பணத்தை திருப்பி கொடுக்க தவறினால், பிரதிவாதி – குற்றம்சாட்டப்பட்டுள்ள லதா ரஜினிகாந்த் அந்த பணத்தை ஆட் பெரோ நிறுவனத்துக்கு திருப்பி கொடுப்பதாக பொறுப்புறுதி அளித்துள்ளார். எனவே இந்த வழக்கை ஜூலை 3, 2018’ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அந்த நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மாத காலமாகியும் மீடியா ஒன் நிறுவனமோ, லதா ரஜினிகாந்தோ ஆட் பெரோ நிறுவனத்திற்கு பணத்தை இதுநாள் வரை திருப்பி செலுத்தவில்லையாம்.

அவ்வப்போது சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம் சரியில்லை என பேசும் ரஜினிகாந்த், இதற்கு முன்பு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் போலி ஆவணங்களை சமர்பித்ததற்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் வழங்கிய போதும் சரி, மூன்று மாதங்களுக்கு முன்பு உச்ச் நீதிமன்றம் வழங்கிய ஆணையையே ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மதித்து செயல்படவில்லை.

தன்னுடைய மனைவியினால், அதுவும் தன்னுடைய சொந்த வீட்டிலேயே சிஸ்டம் சரியாக இல்லாததை தட்டி கேட்க முடியாததற்கு ரஜினி தன்னுடைய வீட்டுக்கு ஒரு சிஸ்டம் நாட்டுக்கு ஒரு சிஸ்டம் என்று நினைக்கிறாரா அள்ளது அவருடைய வீட்டில் இருக்கும் தவறான சிஸ்டத்தை தட்டி கேட்க அய்யப்படுகிறாரா.

ரஜினி…, நேர்மையானவர், தைரியமானவர் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையில் இருக்கிறார், அந்த நம்பிக்கை நிலைத்துநிற்க வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பொறுப்புறுதியை காப்பாற்ற வேண்டும்.

லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள பொறுப்புறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயலாம் என சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.

ரஜினிகாந்தை அரசியலில் வெற்றிபெற வைப்பது என்பது, லதா ரஜினிகாந்த் நேர்மையில் தான் இருக்கிறது! லெட்ஸ் வெய்ட் அண்ட் சீ!!

Leave a Response