அமைச்சர் எ. வ வேலு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில், அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
அப்போது விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகனை கலாய்த்து பேசினார். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று பேச முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குலுங்க குலுங்க சிரித்தனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
எப்போதாவது ஒருமுறை தான் நான் பேசுகிறேன். அறிவார்ந்த சபையில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். இந்த விழாவில் என்ன பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்று லிஸ்ட் போட்டு தான் வந்தேன். எவ வேலு முதலிலேயே என்னிடம் சொன்னார். இது அரசியல் மேடை கிடையாதுங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது என கூறி அழைத்தார். அரசியலில் ரொம்ப ஜாக்கிரதையாக பேச வண்டும்.
ரஜினிகாந்த் மேடையில் இப்படி பேசவே, அங்கிருந்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியை பார்த்து சிரித்தப்படி கையெடுத்து கும்பிட்டார். மேடையில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல்லு விழுந்து, தாடி வளர்த்து சாகப்போகின்ற நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது என்று சிரித்தப்படியே கூறிச் சென்றார்.