திருவண்ணமலையில் ரேசன் கடையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்..!

திருவண்ணமலையில் உள்ள சின்னப்புத்தூரில் பகுதி நேர ரேசன் கடையில் முறையாக ரேசன் பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பகுதி நேர ரேசன் கடை சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செயல்படுகிறது. இங்கு விற்பனையாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிகிறார். இந்த ரேசன் கடை மூலம் 300 ரேசன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்த ரேசன் கடையில் குறைவான ரேசன் பொருட்கள் வருவதால், மாதந்தோறும் சுமார் 60 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் கடந்த மாதம் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் ரேசன் பொருட்கள் முறையாக வழங்கக்கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் திருமலை 2 அல்லது 3 நாட்களில் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இந்த மாதமும் குறைவாக ரேசன் பொருட்கள் வந்துள்ளதாக நேற்று காலை விற்பனையாளர் ரமேஷ் கூறியுள்ளார். எனவே அதற்கேற்ப ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் ரேசன் கடையில் முறையாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கவேண்டும் என மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். அப்போது மக்கள், “எங்கள் அனைவருக்கும் ஒரே நாளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவேண்டும்.

குறைவாக ரேசன் பொருட்கள் வந்துள்ளதாக ஒவ்வொரு மாதமும் சுமார் 60 குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை. அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வந்தபின் நாங்கள் வாங்குகிறோம்” என பொருட்களை வாங்க மறுத்தனர். அதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் திருமலை நேரில் வந்து, “ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ளூர் பிரமுகர்கள் வந்து எழுத்து மூலமாக புகார் செய்யுங்கள். அதன்பின்னர் முறையாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்” என்றார்.

இதையடுத்து ரேசன் பொருட்களை யாரும் வாங்காமல் கலைந்து சென்றனர். இதனால் ரேசன் கடையை விற்பனையாளர் ரமேஷ் பூட்டி விட்டு சென்றார்.

Leave a Response