இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவர், சிறையில் இருந்து விடுதலையான பிறகு, கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அதிமுக 3 அணிகளாக பிளவுபட்டது.
இதற்கிடையே நேற்று திருவண்ணாமலையில் ‘மூக்குப்பொடி’ சித்தரை சந்தித்து தினகரன் ஆசி பெற்றார். திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலின் வரவேற்புப் பிரிவு முன்பு தரையில் அமர்ந்து இருந்த ‘மூக்குபொடி’ சித்தரை, தினகரன் வணங்கினார்.
சுமார் 10 நிமிட அவரிடம் தரிசனம் பெற்றார். இதன் பிறகு திருவண்ணாமலையை காரில் சுற்றி வந்து தரிசனம் செய்தார்.
யார் இந்த மூக்குப்பொடி சித்தர்?
மூக்குப்பொடி’ சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர். இவர் மூக்குப் பொடியை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமம், இவரது சொந்த ஊர் . அவருக்கு வயது சுமார் 85-க்கு மேல் இருக்கும். இவரது மனைவி இறந்தவுடன் இவர் ஆன்மிகத்தில் இணைந்துவிட்டார். இவருக்கு மகனும் இருக்கிறார். ஆனால், அவர்களுடன் அவ்வளவாக ஈடுபாடு கொள்வதில்லை.
திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்கிறார். மேலும் இவர் தானே புயல் மற்றும் பண மதிப்பிழப்பை முன்கூட்டியே கணித்தவர் என்று பலரால் கூறப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இவர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கிழித்துப் போட்டதாக கூறப்படுகிறது. இவர் அதிகமாக பேசமாட்டார். யாரையும் தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டார். அப்படி பார்த்துவிட்டால் அவர்களது துன்பங்கள் தீரும் என்று நம்பப்படுகிறது.