சித்தராமையா பதவி விலகல்-ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்..!

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தன்னுடைய பதவியில் இருந்து விலகி இருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து கொடுத்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

இந்த களேபரங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தன்னுடைய பதவியில் இருந்து விலகி இருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து கொடுத்தார். இதனால் அவரது ஐந்து வருட ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

அதோடு மொத்த காங்கிரஸ் அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது. சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தாலும் குமாரசாமியே முதல்வராக இருப்பார், சித்தராமையா மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இவர் வருகையை ஒட்டி ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நடக்க இருப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response