பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
எஸ்.வி சேகர் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் நடந்த விழா ஒன்றில் எஸ்.வி சேகர் கலந்து கொண்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய எஸ்.வி சேகர், தான் எங்கும் ஓடிச்சென்று ஒளியவில்லை என்றும், துணிவிருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவியில் தனது உறவினர் இருப்பதன் பின்னணியையும் பயன்படுத்தி எஸ்.வி சேகர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.