பெண் செய்தியாளர்களை பற்றி அவதூறாக பேசிய எஸ்வி சேகரை நெருங்ககூட முடியாமல் போலீசார் அமைதியாக இருக்கின்றனர்.
எத்தனையோ வழக்கு அவர் மீது…ஏன் உயர்நீதிமன்றம் கூட எஸ்வி சேகரை கைது செய்ய தடை இல்லை எனகூறி விட்டது.பிறகு அவரை கைது செய்ய போலீசாருக்கு யார் தான் தடை போடுகிறார்கள்..? என்ற விவரம் வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்தாலும், எல்லோரும் அமைதியாகதான்இருக்கிறார்கர்கள்.
இந்நிலையில் எஸ்வி சேகர் திருப்பதிக்கு சென்று கோவிந்தா போட்டுள்ளார். இந்த தருணத்தில் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்வி சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி.சேகரை ஒரு மாதத்திற்கும் மேலாக போலீசார் கைது செய்யாமலும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலும் இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது முக்கிய நிர்வாகிகளை வீடு புகுந்தும், வாகனங்களை வழிமறித்தும் கைது செய்வதில் தீவிரம் காட்டிய தமிழக காவல்துறையினர் ஊடகங்கள் உட்பட பணியாற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பதிவு வெளியிட்ட எஸ்.வி.சேகரை மட்டும் கைது செய்யாமல் பாரபட்சமாக செயல்படுவது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழகத்தில் பாஜக பிரமுகர்கள் ஹெச். ராஜா உட்பட பலரும் வன்முறையை தூண்டும் வகையிலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததே எஸ்.வி. சேகர் இவ்வாறு அநாகரீகமாகவும், சட்ட விரோதமாகவும் பேசுவதற்கு தைரியத்தை அளித்துள்ளது.
எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தற்போது எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னணியில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
.