1,6,9,11 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்ட புத்தகம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்..!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1,6,9,11 ஆம் வகுப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பாடதிட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த மே மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் போன்ற தேர்வுகளை மாணவர்கள் சிரமம் இல்லாமல் எதிர்கொள்ள கூடிய வகையில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அந்த குழு தமிழகத்தில் 5 இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து 1,6,9,11 ஆம் வகுப்புகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டத்தை அக்குழு உருவாக்கியது. வரைவு பாடத்திட்டம் 2 புத்தகங்களாக தயாரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முடிவடைந்த பின்னர் தற்போது இன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

Leave a Response