பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- கனிமொழி

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த பின்பும் கைது செய்யாதது ஏன் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு அவரது கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஆளுநர் தனது செயலுக்கான விளக்கத்தை கூறி மன்னிப்பும் கேட்டார்.

மன்னிப்பை ஏற்பதாகவும் ஆனால் கன்னத்தை தட்டியதற்காக ஆளுநரின் காரணத்தை ஏற்க முடியாது என்று அந்த பெண் நிருபர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் பூதாகரமாக இருந்த நிலையில் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இதையடுத்து அவர் தனது நண்பர் அனுப்பிய கருத்தை பார்க்காமல் பார்வார்டு செய்ததாக கூறி மன்னிப்பும் கோரினார். இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படுவோம் என்று கருதிய எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கோடை கால நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்டார்.

முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்ட பிறகும் எஸ் வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கனிமொழி கூறுகையில், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

Leave a Response