என்ன நடந்தாலும் மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடியின் ஒரே குறிக்கோள்-ராகுல் காந்தி

இந்த நாடு பற்றி எரிந்தாலும், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், சிறுபான்மையினர் மிரட்டப்பட்டாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் டெல்லியில் இன்று பேரணியை தொடங்கிவைத்து பேசிய ராகுல் காந்தி, மோடி தலையிமையிலான மத்திய பாஜக ஆட்சியில், அரசியல் சாசனம் வழங்கிய முக்கிய அமைப்புகள் அனைத்தும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. நாடாளுமன்றம் முடக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தை காலில் போட்டு மிதித்துவிட்டார்கள். நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் செய்த நிதி மோசடி குறித்து பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் பேசுங்கள் என்றால் ஓடிவிடுகிறார்.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்கவும், புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கவும் பிரதமருக்கு எண்ணம் இல்லை. நாட்டில் தலித் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக அட்டூழியங்களும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால், இப்போது, அந்த வாசகத்தை தங்கள் கட்சிக்குள் சொல்லிக்கொள்கிறார். பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதிலும், உன்னாவ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதிலும் பாஜகவினருக்குத் தொடர்பு இருக்கிறது ஆனால், அவர்களைப் பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை.

இந்த நாடு பற்றி எரிந்தாலும், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், சிறுபான்மையினர் மிரட்டப்பட்டாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள் மற்றும் அவரது விருப்பமாகும் என ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

Leave a Response