தமிழகத்தில் மாநில அரசு என்று ஓன்று இருக்கிறதா-கனிமொழி

தி.மு.க., மாநில மகளிர் அணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சேலத்தில் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு இன்று காலை சேலத்திற்கு வந்திருந்தார். அப்போது சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “ஆளுங்கட்சி மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து மக்கள் பிரச்னைகளைத் தீர்த்தால் எதிர்க்கட்சி போராட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டும் என்ற ஆசையும் இல்லை. பெண்கள் மீதான வன்முறை தொடந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதற்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

இங்கு அரசாங்கம் ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இங்கு மாநில அரசு என்ற ஒன்று இல்லை. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகளுக்கு ஆய்வு நடத்த அதிகாரம் இல்லை. மத்திய அரசு ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட கல்வி நிலையச் செயல்பாடுகளில் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.

பேராசிரியை நிர்மலா தேவியை விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைப் போய்க்கொண்டிருக்கிறது. ஹெச்.ராஜா தொடர்ந்து தி.மு.க மீது விமர்சனம் செய்து வருகிறார். அவர் மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரபாண்டியார் இருக்கும் போது விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டே சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது விவசாயிகளின் அனுமதியில்லாமல் விவசாய நிலங்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுக்கப்படப் போவதாக அறிந்தேன். தி.மு.க என்றும் விவசாயிகள் பக்கம் இருக்கும்” என்றார்.

Leave a Response