நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை அக்கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது.

இதையடுத்து, கடந்த 16-ம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி செயலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் பேராசிரியர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வு பெற்ற நீதிபதி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முதல் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி (எஸ்.பி) தலைமையில் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீஸார் 9 குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிபோலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை இன்று (வெள்ளிக்கிழமை) போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்தானம் தனது விசாரணையை இன்று தொடங்கினார்.

 

Leave a Response