தூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாநாடு : வைகோ அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் வருகிற 28-ஆம் தேதி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது,
மதிமுக 1995-ஆம் ஆண்டிலேயே ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை கடுமையாக எதிர்த்தது. 1996 மார்ச் 5-ஆம் தேதி தூத்துக்குடி, குரூஸ் பர்ணாந்து சிலை எதிரில், எனது தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற உண்ணாவிரத அறப்போர் நடைபெற்றது.

ஏழு நாள்கள் கழித்து, மார்ச் 12-ஆம் நாள், எனது தலைமையில், மிகப்பெரிய கருப்புக்கொடி கண்டன அறப்போர் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர்ந்து அறிக்கைகள் கொடுத்தும், பொதுக்கூட்டங்கள் நடத்தியும் பிரசாரம் செய்து வந்தேன். 1996 டிசம்பர் 9-ஆம் தேதி, 10,000 பேர் பங்கேற்ற உண்ணாவிரத அறப்போர் எனது தலைமையில் நடைபெற்றது.

1997 பிப்ரவரி 24-ஆம் நாள், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு, எனது தலைமையில், மறியல் அறப்போர் நடத்தினோம்; ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டோம்.

ம.தி.மு.க. தொடங்கப்பட்ட மே 6-ஆம் நாள் அன்று, 1997-ல் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசார நடைபயணம் நடைபெறும் என அறிவித்தேன்.

அதன்படி, ஜூன் 2 -ஆம் தேதி ஆயிரக்கணக்கானோருடன் திருவைகுண்டத்தில் நடைபயணத்தைத் தொடங்கி, ஆழ்வார் திருநகரி, குரும்பூர், சாயர்புரம், ஆத்தூர் என பல்வேறு கிராமங்களின் வழியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரம் செய்து, 3 நாள் நடைபயணத்தின் நிறைவாக ஜூன் 4-ஆம் தேதி இரவு 8 மணி அளவில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரசார நடைபயண நிறைவுக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

நிறைவாக நான் உரை ஆற்றும்போது, ‘தூத்துக்குடியில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விவசாயத்தை அழித்து, கடல்வாழ் உயிரினங்களுக்கும் நஞ்சாகி, மீனவர்கள் வாழ்க்கைக்கும் கேடு செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை என் போராட்டம் நிற்காது’ என உறுதி பூண்டேன்.

 

தமிழக அரசு மிகவும் தந்திரத்தோடு, ‘சிப்காட் நிறுவனத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்துகின்றோம்’ என்று கூறி, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதாக அறிவித்தது.

ஆனால் அங்கே ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்திற்கான வேலைகளைத் தொடங்கியதால், அதனை எதிர்த்துக் குமரரெட்டியாபுரம் மக்கள், அறுபத்து எட்டு நாள்களுக்கு முன்னர் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையால், தூத்துக்குடி பகுதியில் பலர் புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கின்றனர்; நுரையீரல் பாதிக்கப்படுகின்றது; தோல் நோய்களும் ஏற்படுகின்றன. அதனால், இன்று சாதி, மதம், கட்சிகளைக் கடந்து, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

தற்போதும் தமிழக அரசு மக்களை ஏமாற்ற, ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைத் தொடர்ந்து வழங்கவில்லை’ என்று கூறி, ஆலையை மூடுவதற்கு முயல்வதைப் போல ஒரு நாடகம் ஆடுகின்றது.

ஆனால், போராட்டம் தணிந்தபின்னர், ஆலையை மீண்டும் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசே ஏற்பாடு செய்யும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மக்களிடமும், மீண்டும் ஒரு போராட்டக்கனலை மூட்டி, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து இருக்கின்றேன்.

22 ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளேன்; தற்போது, தூத்துக்குடியைச் சுற்றிலும் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். எனது பிரசாரப் பயணம் நிறைவு பெற்ற பின், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

கழகக் கண்மணிகளும், பொது நலனில் அக்கறை உள்ளவர்களும், மீனவர்கள், விவசாயிகள், வணிகப் பெருமக்கள், மாணவர்கள், பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response