முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது!

சேலத்தில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதற்கு வழி செய்யும் சில சட்டப்பிரிவுகளை உச்சநீதிமன்றம் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்ததை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. சேலம் மாநகரில் 5 கூட்டு ரோடு அருகேயுள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டை ஆதிதமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்.

முதல்வரின் வீட்டை சுற்றியும் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்த போதும் ஆதி தமிழர் பேரவையினர் 10 பேர் முற்றுகையிட்டதால் அவர்களை ஒவ்வொருவரராக போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களில் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றார், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஆதி தமிழர் பேரவையினர் முதல்வரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 10, 10 பேராக போராட வருவதால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response